மாவட்ட செய்திகள்

திருவாடானை அருகே குடிநீர் வினியோகம் கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை + "||" + Near Thiruvattanai Siege of Union Office for drinking water supply

திருவாடானை அருகே குடிநீர் வினியோகம் கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை

திருவாடானை அருகே குடிநீர் வினியோகம் கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை
திருவாடானை அருகே குடிநீர் வினியோகம் கோரி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டி,

திருவாடானை தாலுகா, ஆதியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளிட்ட 3 குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் 100–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை திருவாடனை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லா மேரியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

அப்போது ஆதியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்பட 3 குடியிருப்புகளுக்கு கடந்த 15 தினங்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது என்றும், இதனை உடனடியாக சரிசெய்து குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக சம்பந்தப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆதியூர் ஊராட்சிக்கு என தனி ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்படும் எனவும், இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிறைவேற்றப்படும் என்றும், ஆதியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் பழுதாகி பயனற்று கிடக்கும் அடிபம்பு உடனடியாக சீரமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:– ஆதியூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்பட 3 குடியிருப்புகளில் சுமார் 125–க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்த கிராமத்திற்கு நீண்ட காலமாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு நேரிலும், மனுக்கள் மூலமாகவும் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காவிரி குடிநீர் வரும்போது ஒரு குடும்பத்திற்கு 2 குடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் தினமும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். பல மைல் தூரம் அலைந்து திரிந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலையில், வேலைக்கு செல்லாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

மேலும் எங்கள் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணி வழங்கப்படாததால் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை விடுப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.