மோட்டார் வாகன சட்டத்தில் “இழப்பீடு வழங்கும் பிரிவுகள் இப்போதைய பணமதிப்புக்கு ஏற்றதல்ல” சட்டதிருத்தம் கொண்டு வராதது துரதிருஷ்டம் எனவும் நீதிபதி கருத்து


மோட்டார் வாகன சட்டத்தில் “இழப்பீடு வழங்கும் பிரிவுகள் இப்போதைய பணமதிப்புக்கு ஏற்றதல்ல” சட்டதிருத்தம் கொண்டு வராதது துரதிருஷ்டம் எனவும் நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 14 May 2019 11:15 PM GMT (Updated: 14 May 2019 10:29 PM GMT)

மோட்டார் வாகன சட்டத்தில் இழப்பீடு வழங்கும் பிரிவுகள் இப்போதைய பணமதிப்புக்கு ஏற்றது இல்லை என்றும், சட்ட திருத்தம் கொண்டு வராதது துரதிருஷ்டம் எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை,

தேனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. அவருடைய மனைவி புஷ்பா. 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 7.8.2010 அன்று கருப்பசாமி தனது மனைவி புஷ்பா, மகன் நவீன்ராஜ் ஆகியோருடன் தேனி-வீரபாண்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மினி வேன் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு, தேனி மாவட்ட விபத்து வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் கருப்பசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, விபத்தை ஏற்படுத்திய வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனத்தின் சார்பில் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 360-ஐ கருப்பசாமி குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மோட்டார் வாகன சட்டம் கடந்த 1988-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மறுப்பது போன்றதாகும். இந்த சட்டத்தில் இழப்பீடு வழங்கும் பிரிவுகள் தற்போதைய வருவாய், பணமதிப்பு, செலவு செய்யும் திறன் போன்றவற்றுக்கு ஏற்றதாக இல்லை. மோட்டார் வாகன சட்டத்தின் இழப்பீடு வழங்கும் பிரிவுகள் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தால் திருத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக இதுவரை எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. இதற்காக அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளும் இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. அமெரிக்க நாட்டில் அதிக அளவு வாகனங்கள் உள்ளன. ஆனாலும் இந்தியாவில் தான் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. விதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாதது, முறையாக பராமரிக்காத சாலைகள் ஆகியவற்றால்தான் விபத்துகள் அதிகரிக்கின்றன.

வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தாலும், வீட்டிலிருந்து குடும்பத்தை கவனிக்கும் பெண்ணாக இருந்தாலும் சமமாகவே பார்க்கப்பட வேண்டும். இந்த வழக்கில், 2 வயது குழந்தை தன் தாயை இழந்திருக்கிறது. குழந்தைக்கு ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. எனவே விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதில் ரூ.12 லட்சத்தை சிறுவன் நவீன்ராஜ் பெயரில் வைப்புத்தொகையாக வங்கியில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story