கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலையில், உயிர் பலி வாங்க காத்திருக்கும் பாலம் - சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலையில், உயிர் பலி வாங்க காத்திருக்கும் பாலம் - சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 12:12 AM GMT)

கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம் ஒன்று உயிர் பலி வாங்க காத்திருக் கிறது. அதனை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலையும் ஒன்று. இந்த நெடுஞ்சாலை வழியாக கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதன் ஒரு பகுதி முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் அமைந்து உள்ளது. எனவே அங்குள்ள சாலையில் எந்தவித சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள முதுமலை வனத்துறையினர் அனுமதிப்பது இல்லை. சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை தொடர்வதால், தொரப்பள்ளியில் இருந்து கக்கநல்லா வரை சாலை பழுதடைந்து, ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு உள்ளன. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலங்களும் இடிந்து விழும் நிலைக்கு சென்றுவிட்டன. பாலங்களில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து, எந்தவித பாதுகாப்பும் இன்றி காணப்படுகின்றன. குறிப்பாக கார்குடி பகுதியில் உள்ள பாலத்தின் அடிப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. கனரக வாகனங்கள், அரசு பஸ்கள் பாலத்தை கடக்கும்போது, இடிந்து விழும் நிலைக்கு அதிர்வு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பாலத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே எப்போது பாலம் இடிந்து விழுந்து உயிர் பலி வாங்குமோ? என்ற பீதி நிலவுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கார்குடியில் உள்ள பாலம் வலுவிழந்து மோசமான நிலையில் உள்ளது. அதனை கடந்து செல்லும்போது, இடிந்து விழுந்து விடுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதே பீதி சுற்றுலா பயணிகளிடமும் காணப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், விரைவில் பாலம் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உயிர் பலி ஏற்படுவது தவிர்க்க முடியாததா கிவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story