மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம், திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை + "||" + Pollachi Sexual Affairs, Thirunavukara farm house CBI Officers Action test

பொள்ளாச்சி பாலியல் விவகாரம், திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

பொள்ளாச்சி பாலியல் விவகாரம், திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆனைமலை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் ரீதியாக கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த விவகாரம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரரை ஒரு கும்பல் தாக்கியது. இதனைதொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சி.பி.சி.ஐ.டி.க்கும் அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கும் மாற்றப்பட்டது. தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு பொள்ளாச்சியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தில் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 8.30 மணி வரை நீடித்தது.

திருநாவுக்கரசு பண்ணை வீட்டின் உள்ளே இருந்த ஸ்பீக்கர் பெட்டிகள், சத்தம் வெளியே அதிகம் கேட்காத வகையில் ஜன்னல்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவற்றை வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். மேலும், பாலியல் விவகாரத்தில் வெளியான ஒரு பெண்ணின் வீடியோ திருநாவுக்கரசு வீட்டில் பதிவு செய்யப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர்.

பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளவர்கள் நள்ளிரவு நேரத்தில் வருவதும், அங்கு கும்மாளமிடுவது, அதிக சத்தத்துடன் பாட்டு வைப்பது, பெண்களை அழைத்து வருவது உள்ளிட்டவை குறித்து சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடமும், பக்கத்து வீட்டில் வசிப்போரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு 2 இளம்பெண்கள் ஆட்டோவில் வந்தனர். அந்த பெண்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல பணம் இல்லாமல் தவிப்பதாக கூறினார்கள்.

மேலும், திருநாவுக்கரசு மற்றும் அவர்களது நண்பர்கள் தங்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும், அதன்பிறகு தாங்கள் வைத்திருந்த பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறினார்கள்.

இதனால் தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறி அழுதனர். இதனை தொடர்ந்து அந்த பெண்களுக்கு தலா ரூ.200 கொடுத்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதனைதொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போலீசார் பதிவுசெய்த வழக்கு, விசாரணை விவரங்கள், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை விவரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.