ஆத்தூரில், குடிநீர் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் மறியல் - பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ஆத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டி,
ஆத்தூர் ஊராட்சிக்கு கடந்த 50 வருடங்களாக காமராஜர் அணையிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 4 வருடங்களாக காமராஜர் அணையிலிருந்து ஆத்தூருக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்தூரில் உள்ள பொதுமக்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆத்தூர் ஊராட்சியில் உள்ள சவேரியார் தெரு, நந்தனார் தெரு, முஸ்லிம் தெரு ஆகிய 3 இடங்களில் நேற்று காலை 8 மணியளவில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சவேரியார் தெருவுக்கு ஆத்தூர் தாசில்தார் பிரேமா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சுப்பிரமணி, செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலெட்சுமி, ஊராட்சி செயலர் மணவாளன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நந்தனார் தெரு, முஸ்லிம் தெருவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சவேரியார் தெருவுக்கு திரண்டு வந்தனர். பின்னர் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அதிகாரிகள், விரைவில் தண்ணீர் விட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதை ஏற்றுக் கொள்ளாத கிராம மக்கள் எங்கள் ஊராட்சியில் உள்ள காமராஜர் அணையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் வழியோர கிராமமான ஆத்தூருக்கு தண்ணீர் தர திண்டுக்கல் மாநகராட்சி மறுக்கிறது என கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீஸ் சார்பில், மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. மேலும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தின் போது, சவேரியார்தெருவை சேர்ந்த கிளாரா(வயது 55)என்ற பெண் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது 2 நாட்களில் முறையாக குடிநீர் வழங்குவோம் என வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி உறுதி அளித்தார். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story