ஓட்டப்பிடாரம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு - பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்


ஓட்டப்பிடாரம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு - பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 14 May 2019 11:30 PM GMT (Updated: 15 May 2019 12:13 AM GMT)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக சண்முகையா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 3 நாட்கள் தீவிர பிரசாரம் செய்தார். நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு காலை 9 மணிக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கே.என்.நேரு எம்.எல்.ஏ, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த பதனீரை மு.க.ஸ்டாலின் வாங்கி குடித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள், “குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்“ என்று வலியுறுத்தினர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்களிடம் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தொடர்ந்து காமராஜர் நகருக்கு சென்றார். அங்கு மக்கள் அன்போடு கொடுத்த இளநீரை அருந்தினார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அவருடன் மக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு கூட்டாம்புளிக்கு சென் றார். அங்கு நார்கட்டிலில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, “அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்கள் நலப்பணியாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். அதற்கு உரிய தீர்வு காண வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ.10 கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள தண்ணீரை குடித்ததால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்“ என்று பொதுமக்கள் கூறினர்.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க அரசு தாமதப்படுத்தி வருகிறது. இதனால் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. அதே போன்று இந்த தொகுதி எம்..எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் பணிகள் எதுவும் நடக்கவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பது போன்று மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கல்விக்கடன், 5 பவுனுக்கு குறைவான தங்கநகைக் கடன்கள் ரத்து செய்யப்படும். ஆட்சிக்கு வந்ததும், அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று கூறினார்.

Next Story