கீழ்வேளூர் வளையல்குட்டை குளம் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கீழ்வேளூர் வளையல்குட்டை குளம் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 May 2019 4:15 AM IST (Updated: 16 May 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் வளையல்குட்டை குளம் தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூர் தெற்கு வீதி அருகே உள்ள செட்டி பண்ணை தெருவில் வளையல்குட்டை குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் வளையல்குட்டை குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளத்தின் அருகே உள்ள குடியிருப்பு மக்கள் பல்வேறு கழிவு பொருட்களை இங்கே வந்து கொட்டுகின்றனர்.

தற்போது குளத்தின் தண்ணீர் கழிவுநீராக மாறி சாக்கடை போல் காட்சியளிக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்றுநோயை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த வழியாக நடந்து செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியின் மத்தியில் உள்ள இந்த குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Next Story