மறுவாக்குப்பதிவு நடக்கும் இடங்களில், கலவரம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி - அ.தி.மு.க. வேட்பாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு


மறுவாக்குப்பதிவு நடக்கும் இடங்களில், கலவரம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி - அ.தி.மு.க. வேட்பாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2019 4:15 AM IST (Updated: 16 May 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

தேனி நாடாளுமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடக்கும் வாக்குப்பதிவு மையங்களில் கலவரம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

தேனி,

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மயில்வேல் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் புகார் மனுக் கள் அளித்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

தேனி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. தி.மு.க., அ.ம.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையம் மீதும், ஆளுங்கட்சியாகிய அ.தி.மு.க. மீதும் பல்வேறு விமர்சனங்களையும், பொய் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தன.

இருப்பினும் தேர்தல் அமைதியான மற்றும் நியாயமான முறையில் நடைபெற்றது. தோல்வி பயத்தால் எதிர்க் கட்சியினர் ஒன்று கூடி தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் இந்த தருணத்தில் சதி வேலைகள் செய்து தேர்தல் முடிவுகள் அறிவிப்பதை தாமதப்படுத்தவும், தடுக்கவும் உத்தேசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்-197 மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்-67 ஆகிய 2 இடங்களில் வருகிற 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை அ.தி.மு.க. வரவேற்கிறது.

ஆனால் சமீபத்தில் காலி வாக்குப்பதிவு எந்திரங்கள் மறுவாக்குப்பதிவுக்காக தேனிக்கு கொண்டு வரப்பட்டன. அதை கொச்சைப்படுத்தி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தனர். அதற்குரிய விளக்கத்தை தேர்தல் ஆணையமும் வெளியிட்டுவிட்டது. அந்த நியாயமான விளக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் அ.தி.மு.க. மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

சமீபத்தில்கூட தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில் மறுவாக்குப்பதிவு நடக்க உள்ள 2 வாக்குச்சாவடிகளிலும் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரிய கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வாக்காளர்களை அச்சுறுத்தி அவர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க எதிர்க்கட்சியினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிகிறது. தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகள் எந்த செயலையும் செய்யத் தயாராக இருப்பதாக அறிகிறோம்.

எனவே வருகிற 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் 2 வாக்குச்சாவடிகளிலும் அதிக அளவு பாதுகாப்பு வழங்கி, குற்றச்செயல்களில் ஈடுபட உள்ள நபர்களை அடையாளம் தெரிந்து அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்து, அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story