இந்திய கடற்படை கப்பல் கன்னியாகுமரியில் தீவிர ரோந்து


இந்திய கடற்படை கப்பல் கன்னியாகுமரியில் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 15 May 2019 11:15 PM GMT (Updated: 15 May 2019 10:54 PM GMT)

இந்திய கடற்படை கப்பல் கன்னியாகுமரியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது.

கன்னியாகுமரி,

இலங்கையில் சமீபத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்பகுதி முழுவதும் கப்பல்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடற்படை கப்பல் ரோந்து

இந்தநிலையில் விடுதலை புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு, விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பை தொடர்ந்து தமிழக கடலோர கண்காணிப்பு பணி மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் கண்காணிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அந்த கப்பல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தின் அருகே இந்திய கடற்படை கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. அதனை கடற்கரையில் நின்ற சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Next Story