சொந்த ஊரில் வாழ முடியாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


சொந்த ஊரில் வாழ முடியாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2019 11:12 PM GMT (Updated: 15 May 2019 11:12 PM GMT)

சொந்த ஊரில் வாழ முடியாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு குப்பத்தை சேர்ந்தவர் பழனி என்ற ஆறுமுகம். இவர் சிலரிடம் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவரிடம் பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஊரில் குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டபோது அவரால் தரமுடியவில்லை.

ஊர்க்காரர்களுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மனைவி அஞ்சனா தனது மகன் ராஜாசங்கருடன் (வயது 25) முதலியார்பேட்டை கருமார வீதியில் வாடகைக்கு குடியேறினார்.

அங்கிருந்து நாள்தோறும் மீன் வாங்கி சென்று விற்பனை செய்து வந்தார். ஊரை விட்டு புதுவை வந்த ராஜா சங்கரும் மனமுடைந்த நிலையில் இருந்தார். இத்தகைய சூழ்நிலையில் அஞ்சனா சிங்கப்பூரில் உள்ள தனது மூத்த மகனுக்கு பெண் பார்க்க பூம்புகாருக்கு சென்றுள்ளார்.

இரவு நேரம் ஆகவே தனது மகன் ராஜாசங்கருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இரவு பூம்புகாரில் தங்கிய அஞ்சனா நேற்று முன்தினம் மாலையில் புதுவை திரும்பினார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் ராஜாசங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சொந்த ஊரில் வாழ முடியாத ஏக்கத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் உதவி சப்–இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story