கர்நாடகத்தில் 150 தாலுகாக்களில் கடும் வறட்சி எதிரொலி: கலெக்டர்களுடன் குமாரசாமி ஆலோசனை குடிநீர் பிரச்சினையை தீர்க்க உத்தரவு


கர்நாடகத்தில் 150 தாலுகாக்களில் கடும் வறட்சி எதிரொலி: கலெக்டர்களுடன் குமாரசாமி ஆலோசனை குடிநீர் பிரச்சினையை தீர்க்க உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2019 12:03 AM GMT (Updated: 16 May 2019 12:03 AM GMT)

மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் களுக்கு உத்தரவிட்டார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் வறட்சி நிலவும் 150-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் களுக்கு உத்தரவிட்டார்.

கர்நாடகத்தில் 150-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதாக கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

அந்த பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசு பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் குடகில் உள்ள ரெசார்ட் ஓட்டலில் குமாரசாமி ஓய்வு எடுத்தார். மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் முதல்-மந்திரி ஓய்வு எடுப்பது பற்றி விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் வறட்சி குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்-மந்திரி குமாரசாமி, வறட்சி குறித்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரை யாடல் நடத்தினார். வறட்சி நிவாரண பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது:-

வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை இல்லை. மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.10 கோடி கையிருப்பு உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறட்சி நிவாரண பணிகளில் அரசு அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் அலட்சியம் காட்டக்கூடாது. மாவட்டங்களில் இருந்து புகார்கள் ஏதாவது வந்தால் அதற்கு கலெக்டர்கள் தான் பொறுப்பு.

கிராமங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தனியார் ஆழ்துளை கிணறுகளை வாடகை அடிப்படையில் பெற்று குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க எவ்வளவு நிதி வேண்டுமானாலும் வழங்க அரசு தயாராக உள்ளது. நிதி தேவைப்பட்டால் உடனே அதற்குரிய அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

கால்நடைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தீவன வங்கியை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். கோசாலைகள் இல்லாத பகுதிகளில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்க மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி கிராமப்புறங்களில் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை தேடி மக்கள் வெளியூர் செல்வதை தடுக்கவும், அவர்களுக்கு இங்கேயே வேலை வாய்ப்பு வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் கூலித்தொகை போய் சேர வேண்டும். இதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

வறட்சி குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற குறைகளுக்கு தீர்வு காண வேண்டும். வறட்சி பிரச்சினையை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி அரசியல் செய்கிறது. வறட்சி குறித்து ஏதாவது புகார் வந்தால் அதற்கு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் தான் பொறுப்பு. இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story