கூடுதல் பணம் வந்த ஏ.டி.எம். மையம் : வாடிக்கையாளர்கள் குவிந்தனர்


கூடுதல் பணம் வந்த ஏ.டி.எம். மையம் : வாடிக்கையாளர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 10:13 AM GMT)

அரக்கோணத்தில் கூடுதல் பணம் வந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம், 

ஏ.டி.எம். மையத்தில் நமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தில் எவ்வளவு ரூபாய் வேண்டும் குறிப்பிடுகிறோமோ? அந்த அளவு ரூபாய் மட்டுமே வரும். ஆனால் அரக்கோணத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் வந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:–

வேலூர் மாவட்டம், அரக்கோணம்– காஞ்சீபுரம் சாலையில் எஸ்.ஆர்.கேட் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக கார்டை போட்டு ரூ.1,000 எடுக்க பட்டனை அழுத்தினார். அப்போது அவருக்கு ரூ.5 ஆயிரம் வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்ததும் 50–க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையம் முன்பு குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஏ.டி.எம். மைய வாசலில் இருந்த காவலாளியிடம் ஏ.டி.எம். மையத்தை மூட சொன்னார்கள். மேலும் இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வங்கி அதிகாரிகள் இதுவரை எத்தனை பேருக்கு அதிக அளவில் பணம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கும். அதை வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மேலும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஏதேனும் கோளாறு காரணமாக இது போன்ற கூடுதல் பணம் வந்திருக்கலாம் தெரிவித்தனர்.

அரக்கோணம் கிளை வங்கியில் உள்ள அலுவலர்கள் இதுகுறித்து சென்னை மற்றும் வேலூரில் உள்ள வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கம்ப்யூட்டர் பொறியாளர்கள் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்காலிகமாக அந்த ஏ.டி.எம்மில் பணபரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் சரியான விதத்தில் பணம் அளிக்கப்படுகிறதா? என்பதை பலமுறை கணக்கில் எடுத்து அதன்பின்னர் அந்த ஏ.டி.எம்.இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூடுதல் பணம் கிடைக்கும் என்று வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.


Next Story