தாவணகெரே அருகே, சரக்கு லாரி கவிழ்ந்தது செத்த கோழிகளை போட்டி போட்டு எடுத்து சென்ற கிராம மக்கள்


தாவணகெரே அருகே, சரக்கு லாரி கவிழ்ந்தது செத்த கோழிகளை போட்டி போட்டு எடுத்து சென்ற கிராம மக்கள்
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 4:18 PM GMT)

தாவணகெரே அருகே, தாறுமாறாக ஓடிய சரக்கு லாரி கவிழ்ந்ததில் 800 கோழிகள் செத்தன. செத்த கோழிகளை கிராம மக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.

தாவணகெரே,

தாவணகெரே தாலுகா மாயகொண்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தம்மனஹள்ளி பகுதியில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை சரக்கு லாரி ஒன்று கோழிகளை ஏற்றிக் கொண்டு அப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சரக்கு லாரி பல்டி அடித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து லாரியின் டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த 800 கோழிகள் பரிதாபமாக செத்தன. செத்த கோழிகளை அப்பகுதி மக்கள் போட்டா, போட்டி போட்டு வீட்டிற்கு சமையல் செய்ய எடுத்து சென்றனர்.

இதுபற்றி அறிந்த மாயகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது செத்து போன 800 கோழிகள் தாவணகெரேயில் இருந்து தியாமனஹள்ளியில் உள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டவை என்பதும், அந்த கோழிகள் ஆரீப் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

செத்து போன 800 கோழிகளின் மொத்த மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மாயகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story