தாலி கட்டுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பு சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் திருப்பூரில் அதிகாரிகள் நடவடிக்கை


தாலி கட்டுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பு சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் திருப்பூரில் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 May 2019 4:00 AM IST (Updated: 17 May 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தாலி கட்டுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பு சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.

திருப்பூர், 

திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 7-ம் வகுப்பு வரை படித்து பனியன் நிறுவனத்துக்கு வேலை சென்று வருகிறார். இவருடைய தந்தை இறந்து விட்டார். தாயார் உள்ளார். இந்தநிலையில் சிறுமிக்கும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த 29 வயது பூ வியாபாரிக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

இவர்களின் திருமணம் நேற்று காலை 10.30 மணிக்கு திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் வைத்து நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் ஆனது. திருமணத்துக்கு இருவீட்டினர், உறவினர்கள் நேற்று காலை கோவிலுக்கு வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சைல்டுலைன் அமைப்புக்கு தொலைபேசி மூலமாக சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது.

உடனடியாக சைல்டுலைன் உறுப்பினர்கள், திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட காமாட்சியம்மன் கோவிலுக்கு விரைந்தனர். காலை 10.20 மணிக்கு கோவிலை அடைந்தனர். அங்கு சிறுமியும், மணமகனும் திருமணத்துக்கு தயார் நிலையில் மேடையில் இருந்தனர். தாலி கட்டுவதற்கு 10 நிமிடம் முன்பாக அதிகாரிகள் குழுவினர் சென்று விசாரித்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். சிறுமிக்கு 16 வயது ஆகிறது என்பது சான்றிதழ் மூலமாக உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இருவீட்டாரையும் திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாலி கட்டுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பு திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story