தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை - சூலூர் திண்ணை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை - சூலூர் திண்ணை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 7:27 PM GMT)

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடியும், அதை தீர்க்க அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்று சூலூர் தொகுதியில் நடைபெற்ற திண்ணை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கோவை,

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 19-ந்தேதி(நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சூலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து நேற்று காலை 8 மணியளவில் கோவை அப்பநாயக்கன்பட்டியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் பல இளைஞர்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாமல் தினந்தோறும் அவதியுற்றுவருவதாகவும், கல்வி,விவசாய கடன், பஸ் வசதி,கழிவறைகள் இல்லாத நிலை, கேபிள் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எடுத்து கூறினர்.

குறைகளை கேட்டபிறகு பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும், தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே இருந்தபடி கேபிள் கட்டணம் ரூ.100-க்கு கொண்டுவரப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்துள்ளோம். அத்தனை பிரச்சினைகளும் தி.மு.க. தலைமையில் அரசு அமைந்தவுடன் சரி செய்யப்படும்’ என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, ஸ்டாலினுக்கு அந்த பகுதி மக்கள் தேனீர் கொடுத்து தங்களது அன்பினை வெளிப்படுத்தினர். தேனீர் குடித்த ஸ்டாலின், அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து செல்பி படம் எடுத்துக்கொண்டார். அந்த பகுதியை சேர்ந்த முத்து-பவானி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தமிழரசி என்று பெயர் சூட்டினார்.அப்போது பலர் அவருடன் கைகுலுக்கி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

பின்னர், அப்பநாயக்கன்பட்டி பஸ்நிலையம் அருகே ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அந்த பகுதியில் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டினர். முறையாக மருந்துகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த பகுதி பிரச்சினைகளை தீர்க்க பொங்கலூர் பழனிசாமி உறுதுணையாக இருப்பார் என்று கூறிய ஸ்டாலின், இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது அந்த வழியாக 3 சக்கர சைக்கிளில் சென்ற மாற்றுத்திறனாளியை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

பின்னர் செலக்கரிச்சல் பகுதியில் உள்ள தந்தை பெரியார் நகர் பகுதியில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே காரணம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். விவசாய கடன் ரத்து செய்யப்படும். கியாஸ் விலை குறைக்கப்படும். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.

அ.தி.மு.க. அரசு இந்த பிரச்சினை உள்ளிட்ட எதையும் தீர்க்க அக்கறை செலுத்தவில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்வதிலேயே கவனமாக உள்ளனர். அ.தி.மு.க. அரசுக்கு மக்களை பற்றி கவலையில்லை. பிரதமர் மோடி அளித்துள்ள எந்த வாக்குறுதியையும் அவர் இதுவரை நிறைவேற்றவில்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆளுங்கட்சி பிரமுகரின் மகனே சம்பந்தப்பட்டு இருக்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பொள்ளாச்சியில் 7 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணம், கோடநாடு கொலை, கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகியவை குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தப்படும். எனவே அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அந்த பகுதியை சேர்ந்த மாணவி அம்சவேணி, ஸ்டாலினிடம் தனது குறைகளை தெரிவித்தார். ‘குறிப்பாக அருந்ததியினர் சமூகத்தை தேடி வந்து எங்களிடம் குறைகளை கேட்கின்ற இந்தியாவில் ஒரே தலைவர் நீங்கள்தான் என்றும், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த தான், கலைஞர் கொடுத்த இடஒதுக்கீட்டினால் எம்.பில் வரை படிக்க முடிந்தது. அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை மேலும் அதிகப்படுத்த வேண்டும்’ என்றும் ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அந்த பகுதிமக்கள் அன்புடன் அளித்த தேனீரை அருந்தினார்.

அப்பகுதி பெண்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி ஸ்டாலினிடம் கொடுத்தனர்.

மனுக்களை படித்த ஸ்டாலின், இந்த மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மனுக்களில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்து பிரசாரத்தை முடித்தார்.

Next Story