மறுவாக்குப்பதிவுக்காக தேனிக்கு கொண்டு வரப்பட்ட ‘விவிபேட்’ எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் பரபரப்பு
மறுவாக்குப்பதிவுக்காக திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட ‘விவிபேட்’ எந்திரங்களில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் அலுவலர்களுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி,
தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வடுகப்பட்டியில் உணீள்ள வாக்குச்சாவடி எண் 197 மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 67 ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக கோவையில் இருந்து தேனிக்கு கடந்த 7-ந்தேதி 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. மறுவாக்குப்பதிவு குறித்த அறிவிப்பு வரும் முன்பே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்றைய நாளில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மறுவாக்குப்பதிவுக்கு தேவையான 20 கட்டுப்பாட்டு கருவிகள், 30 ‘விவிபேட்’ எந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி) திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு தனியார் வேனில் இந்த கருவிகள், எந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலையில் கொண்டு வரப்பட்டன.
மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவை வேனில் இருந்து இறக்கப்பட்டு, தாலுகா அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டன.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகள், ‘விவிபேட்’ எந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. இதற்காக அரசியல் கட்சியினருக்கு கருவிகள், எந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள அடையாள எண்கள் குறித்த பட்டியல் வழங்கப்பட்டது. அந்த பட்டியலை வைத்து அவை சரியாக உள்ளதா? என்று சரிபார்த்தனர்.
பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறையின் ‘சீல்’ உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களும் எடுத்து வரப்பட்டு அவையும் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக பெல் நிறுவனத்தின் என்ஜினீயர்கள் வந்து இருந்தனர். அவர்கள் முதற்கட்ட ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
அப்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்குப்பதிவு எந்திரங்களில் சோதனை முயற்சிக்காக ஓட்டுப் போட்டு பார்த்தனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் எதுவும் இன்றி, ஆங்கில எழுத்துகள் வரிசைப்படுத்தி ஒட்டப்பட்டு இருந்தன. ஆனால் ஓட்டு போட்டபோது, விவிபேட் எந்திரத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், அவர்களுக்கான சின்னங்கள் தெரிந்தது. இதை பார்த்த தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அங்கிருந்த அலுவலர்களிடம் விளக்கம் கேட்டனர்.
மேலும் ‘வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவையில் இருந்தும், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் எந்திரங்கள் திருவள்ளூரில் இருந்தும் கொண்டு வரப்பட்ட நிலையில் தேனியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் எப்படி அதற்குள் வந்தன?’ என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் சிலர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், வாக்குவாதம் நீடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரிதா மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள், ‘கடந்த மாதம் தேனியில் நடந்த தேர்தலின் போது, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்திய எந்திரங்கள் போக, மீதம் இருந்த எந்திரங்கள் திருவள்ளூரில் உள்ள மாநில மைய கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாம் அனுப்பிய எந்திரங்களையே மறுவாக்குப்பதிவுக்காக தேனிக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, மீண்டும் புதிதாய் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்’ என்றனர். இந்த விளக்கத்தை அரசியல் கட்சியினர் ஏற்றுக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டன. சின்னம் பொருத்தப்பட்ட பின்பு அதில் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story