சிவகங்கை அருகே, கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


சிவகங்கை அருகே, கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 9:40 PM GMT)

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த மதகுபட்டி அருகே அழகியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நகரம்பட்டி-பாகனேரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 19 வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருமயம் ஓனாங்குடி சலீம் வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி கார்த்திக்ராஜா மற்றும் வெள்ளரிப்பட்டி வசந்த் வண்டியும், 3-வது பரிசை துரும்புபட்டி சாதனா மற்றும் சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும், 4-வது பரிசை நகரம்பட்டி அம்பலத்தரசு வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை கல்லல் உடையப்பா மற்றும் நெல்லை மாவட்டம் வேலாங்குளம் கண்ணன் வண்டியும், 2-வது பரிசை மலம்பட்டி ராசு வண்டியும், 3-வது பரிசை சாத்தமங்கலம் வைரமணி வண்டியும், 4-வது பரிசை தேனி சிறப்பாறை வெண்டி முத்தையா வண்டியும் பெற்றது.

வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story