பழனி அருகே, தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - விவசாயிகள் அச்சம்


பழனி அருகே, தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - விவசாயிகள் அச்சம்
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 9:40 PM GMT)

பழனி அருகே தோட்டத்துக்குள் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் மோட்டார் அறையின் தகர ‘ஷீட்’டுகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

பழனி,

பழனியை அடுத்த கணக்கன்பட்டி அருகே மலையடிவாரத்தில் கோம்பைபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தங்கள் தோட்டப்பகுதியில் கரும்பு, காய்கறி ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டுயானைகள் கோம்பைபட்டியில் உள்ள தோட்டப்பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. இவை அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர், வேலி ஆகியவற்றை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் தோட்டப்பகுதிக்குள் புகும் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானைகள், தகர ‘ஷீட்’டுகளால் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் அறையை சேதப்படுத்தின. பின்னர் அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்ற ராஜேந்திரன் மோட்டார் அறையின் பக்கவாட்டில் இருந்த தகரத்தாலான ‘ஷீட்’ சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த பகுதியில் யானைகளின் கால்தடம் பதிந்திருந்தது. இதையடுத்து தோட்டத்தில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம் செய்வது அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறையாக வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story