நாமக்கல்லில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.
நாமக்கல்,
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ‘விவிபேட்’ எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு வேட்பாளார்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டது.
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 4 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அதேபோல் பாதுகாப்பு பணிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு சுற்று வாரியாக வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான 5 ‘விவிபேட்’ எந்திரங்களில் இருக்கும் வாக்குச்சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன. அதேபோல் தபால் வாக்கு எண்ணும் பணிகளும் நடைபெற உள்ளன.
இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.
இதில் பதிவான வாக்கு எண்ணிக்கை விவரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கணினிகளில் பதிவு செய்வதோடு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிப்பது குறித்தும், சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளியிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்தும் அவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அதேபோல் வாக்கு எண்ணிக்கையின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கிராந்திகுமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story