தூத்துக்குடி அருகே இளம்பெண் சாவு; உறவினர்கள் சாலை மறியல்


தூத்துக்குடி அருகே இளம்பெண் சாவு; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 May 2019 10:00 PM GMT (Updated: 17 May 2019 7:08 PM GMT)

தூத்துக்குடி அருகே இறந்த இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை இன்றி ஒப்படைக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் பீர்முகமது. இவருடைய மனைவி சகிராபானு(வயது 24). இவர் கர்ப்பமாக இருந்தார். நேற்று முன்தினம் மாலையில் இவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தாராம். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிரேத பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சகிராபானுவுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இறந்த பெண்ணின் உறவினர்கள், சகிரா பானு இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையால் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் போலீசார் மறுப்பு தெரிவித்தனர். உடனடியாக அந்த பெண்ணின் உறவினர்கள் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. நீண்ட நேரமாக எந்த முடிவும் எட்டப்படாததால், ஆத்திரம் அடைந்த மக்கள் வி.வி.டி. சிக்னல் ரோட்டிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை 4-30 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது.

மேலும் முஸ்லிம் மக்கள் நோன்பு இருந்து வருவதால், மறியலில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதியிலேயே நேற்று நோன்பு திறந்தனர்.

Next Story