டாக்சியில் சென்ற போது 60 தோட்டாக்களை தவற விட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


டாக்சியில் சென்ற போது 60 தோட்டாக்களை தவற விட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 18 May 2019 3:16 AM IST (Updated: 18 May 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

60 தோட்டாக்களை டாக்சியில் தவற விட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக இருந்து வந்தவர் கணேஷ். இவர் சிறைக்கைதிகளை கோர்ட்டு விசாரணைக்காக அழைத்து செல்லும் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த மாதம் 18-ந்தேதி பைகுல்லா சிறையில் இருந்து விசாரணை கைதி ஜாமாதர் என்பவரை போலீஸ்காரர் கணேஷ் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து சிறைக்கு அழைத்து செல்ல அவர் டாக்சியில் பயணம் செய்தார்.

அப்போது பாதுகாப்பிற்காக போலீஸ்காரர் கணேஷ் தன்னிடம் இருந்த 60 தோட்டாக்களை டாக்சியில் வைத்திருந்தார். ஆனால் டாக்சியில் இருந்து இறங்கும் போது அந்த தோட்டாக்களை எடுக்காமல் இறங்கி விட்டார். டாக்சி சென்ற பின்னர் தான் தோட்டாக்களை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் இதுபற்றி தார்டுதேவ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த டாக்சியை கண்டுபிடித்து சோதனை செய்தனர். ஆனால் அதில் தோட்டாக்கள் எதுவும் சிக்கவில்லை. மேலும் டாக்சி டிரைவரும் தான் தோட்டாக்களை பார்க்கவில்லை என கூறிவிட்டார்.

இதையடுத்து தோட்டாக்களை தவறவிட்ட போலீஸ்காரர் கணேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், பணியில் அலட்சியமாக இருந்த அவர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்படார்.

Next Story