போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விட்டு வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் சரண்
பழனியில் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விட்டு வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் சரண் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பழனி,
பழனி பத்ரா தெருவை சேர்ந்த மாசாணம் மகன் இருளப்பன் (வயது 20). இவர் மீது செல்போன் திருட்டு வழக்கு உள்ளது. இதுதொடர்பாக இவர் நிபந்தனை ஜாமீன் பெற்று பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு ஆஜராகி வந்தார். இந்நிலையில் நேற்று காலை இருளப்பன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பழைய தாராபுரம் சாலையில் உள்ள தேவாலயம் பகுதியில் சென்றபோது, திடீரென அங்கு வந்த 2 பேர் அவரை சுற்றி வளைத்தனர்.
இதைக்கண்டதும் இருளப்பன் தப்பியோட முயற்சித்தார். ஆனால் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் இருளப்பனின் இடது கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் இருளப்பன் துடிதுடித்தார். இதைக்கண்ட பொதுமக்கள் பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த இருளப்பனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழனி தோட்டக்கார தெருவை சேர்ந்த கணேசன் மகன் அகிலேஷ் (22), ராமர்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சின்னத்துரை ஆகியோருக்கும், இருளப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் அரிவாளால் இருளப்பனை வெட்டியது தெரியவந்தது. இதற்கிடையே அகிலேஷ், சின்னத்துரை ஆகிய இருவரும் பழனி போலீசில் சரணடைந்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story