கம்பம் பகுதியில், ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்நிலைகள்


கம்பம் பகுதியில், ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்நிலைகள்
x
தினத்தந்தி 18 May 2019 10:45 PM GMT (Updated: 18 May 2019 7:57 PM GMT)

கம்பம் பகுதியில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம்,

கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு, தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாக பல்வேறு குளங்கள் உள்ளன.

தற்போது அந்த குளங்கள் மற்றும் அதற்கு தண்ணீர் வருகிற ஓடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக கம்பம் பகுதியில் முக்கிய பாசன ஆதாரமான புதுக்குளத்தை தனியார் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய் விட்டது. குளத்துக்கு தண்ணீர் வருகிற ஓடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

புதுக்குளம் மட்டுமின்றி கம்பம் பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் மழைக்காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை.

தண்ணீர் இல்லாததால், விளைநிலங்கள் விண்ணை பார்த்து கொண்டிருக்கின்றன. விவசாயம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு தொழிலும் நலிவடைந்து விட்டது. எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள புதுக்குளம் மற்றும் நீரோடைகளை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, புதுக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தனியார் சிலர் போட்டி போட்டு ஆக்கிரமித்துள்ளனர். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கம்பம் மெட்டு மலைப்பாதையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குளத்தை நோக்கி வந்தன. ஆனால் ஓடைகளை தூர்வாராததால், சாலை வழியாக சென்று தண்ணீர் வீணாகி விட்டது. எனவே இனிவருங்காலத்தில் குளங்கள் மற்றும் நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story