மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு + "||" + Amorous young woman in Erode, rescue in love with Kumari

ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு

ஈரோட்டில் மாயமான இளம்பெண்,  குமரியில் காதலனுடன் மீட்பு
ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியை சேர்ந்த காதலனுடன் மீட்கப்பட்டார். இந்த காதல்ஜோடி குமரியில் தங்கியிருந்த போது போலீசார் மீட்டனர்.
பூதப்பாண்டி,

ஈரோடு மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், சாயப்பட்டறை தொழிலாளி. இவருடைய மகள் நிரஞ்சனா (வயது 20). இவர் பி.எஸ்.சி., முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், குமரி மாவட்டம் கடுக்கரை அய்யப்பன் கோவில் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணகுமார் என்ற சதீசுக்கும் (27) பழக்கம் ஏற்பட்டது. சதீஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.


வேலைக்கு செல்லும் போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நிரஞ்சனா வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததாக தெரிகிறது.

இதனால் நிரஞ்சனா கடந்த 14–ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்று விட்டார். இதனையடுத்து நிரஞ்சனா காணாமல் போனதாக அவருடைய தந்தை ஈஸ்வரன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நிரஞ்சனாவை தேடி வந்தனர்.

இதற்கிடையே நிரஞ்சனா, ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலில் காதலன் சதீஷை திருமணம் செய்து கொண்டு, காதலனின் சொந்த ஊரான குமரி மாவட்டம் கடுக்கரைக்கு சென்று விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு போலீசார், பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் காதல் ஜோடியை மீட்ட போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிரஞ்சனாவை, அவருடைய பெற்றோர் தங்களோடு வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் சதீசுடன் செல்வதில் பிடிவாதமாக இருந்தார். இதனையடுத்து மீட்கப்பட்ட காதல்ஜோடியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.