திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளை சரிபார்க்க ஸ்கேன் கருவிகள்


திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளை சரிபார்க்க ஸ்கேன் கருவிகள்
x
தினத்தந்தி 19 May 2019 10:45 PM GMT (Updated: 19 May 2019 10:00 PM GMT)

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளை ஸ்கேன் கருவி மூலம் சரிபார்த்த பின்னரே எண்ணப்படும்.

திண்டுக்கல், 

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. அதன்படி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, இடைத்தேர்தல் நடந்த நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போன்று, எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களும் தபால் வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்காக 1,400 பேருக்கு ஆன்லைன் மூலம் ரகசிய குறியீட்டுடன், வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை ராணுவ வீரர்கள் பதிவிறக்கம் செய்து, விரும்பிய சின்னத்தில் வாக்களித்து தபாலில் அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை 750 ராணுவ வீரர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை வந்த தபால் வாக்குகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளில் காலை 8 மணி வரை வரும் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு சேர்த்து கொள்ளப்படும். எனவே, மேலும் பல ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் ஒவ்வொரு ராணுவ வீரரின் தபால் வாக்குக்கு தனியாக ஒரு குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. அந்த குறியீட்டை ஸ்கேன் செய்தால் தான், அவருடைய தபால் வாக்கு என்பது உறுதியாகும். குறியீடு இல்லாத தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்து கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளை சரிபார்க்க ஸ்கேன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

அந்த கருவிகள் மூலம் ஸ்கேன் செய்து சரிபார்க்கப்பட்ட பின்னரே, ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். இதற்காக வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story