ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 ‘விவி பேட்’ எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு


ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 ‘விவி பேட்’ எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு
x
தினத்தந்தி 20 May 2019 11:15 PM GMT (Updated: 20 May 2019 5:05 PM GMT)

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 ‘விவிபேட்’ எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அதில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ‘விவிபேட்’ கருவிகள் வாக்கு எண்ணிக்கை மையமான விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மையத்திற்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளைமறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, சுற்று வாரியாக வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளபடி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான 5 ‘விவிபேட்’ எந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான விளக்க கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது :-

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இப்பணி முற்றிலும் தனியாக நடைபெறும். வேட்பாளர்களது வெற்றி மிகக்குறைந்த வித்தியாசத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டால், தபால் வாக்கினை மீண்டும் சரிபார்க்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தபால் வாக்கு எண்ணும் பணியினை தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள உறுதியான அறைகள் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்படும். ஒவ்வொரு மேசைக்கும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் என வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.

கட்டுப்பாட்டு கருவி ஏதேனும் இயங்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிக்கு பதிலாக அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள ‘விவிபேட்’ எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ‘விவிபேட்’ எந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக தனி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு சுற்று வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்து, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் அடிப்படையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான சுற்றுவாரியான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் வெளியிடப்படும்.

மேலும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளபடி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 ‘விவிபேட்’ எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் பதிவாகியுள்ள ஒப்புகைசீட்டுகள் எண்ணப்பட்டு, கட்டுப்பாட்டு கருவியில் பதிவான வாக்குகளுடன் சரிப்பார்க்கப்பட உள்ளன. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் கடைசி சுற்றுவரை எண்ணப்பட்ட பிறகே, ‘விவிபேட்’ எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் சுமுகமாக நடைபெற அனைத்து வேட்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்கியது போலவே, வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கிராந்தி குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story