குடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு


குடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 8:31 PM GMT)

நாகர்கோவிலில் குடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் அவருடைய கணக்காளரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டம் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). தொழில் அதிபரான இவர் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஹேமா (48). இவர்களுக்கு ஷிவானி (20) என்ற மகள் இருந்தார். இவர்களுடன் சுப்பிரமணியனின் தாயார் ருக்குமணியும் (72) வசித்து வந்தார். ஷிவானி குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சுப்பிரமணியன் தனது மனைவி ஹேமா, மகள் ஷிவானி, தாயார் ருக்குமணி ஆகியோருடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், கடனை அடைக்க சென்னையில் உள்ள அவருடைய நண்பரிடம் ரூ.2 கோடி கடன் கேட்டு கெஞ்சியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே அவருக்கு இருந்த கடன் தொகை எவ்வளவு? கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன் விவரம் சேகரிப்பு

இந்தநிலையில் அவர் எந்தெந்த வங்கிகளில் கடன் வாங்கியிருந்தார் என்ற தகவலை போலீசார் சேகரித்தனர். அப்போது நாகர்கோவிலில் உள்ள இரண்டு வங்கிகளில் அவர் கடன் வாங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியிலும் அவர் எவ்வளவு கடன் வாங்கியுள்ளார்? அவற்றில் எவ்வளவு தொகையை திரும்ப செலுத்தியுள்ளார்? இன்னும் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு? என்ற விவரங்களை போலீசார் வங்கிகளில் கேட்டுள்ளனர்.

மேலும் அவர் நடத்தி வந்த தின்பண்டங்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனத்துக்கு பொருட்கள் வாங்கிய வகையில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு மட்டுமே பல லட்சம் பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. தொழில் அதிபர் சுப்பிரமணியன் நிறுவன கணக்குகள் அனைத்தையும் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் கணக்காளராக இருந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தற்போது வெளியூர் சென்றிருக்கிறார். அவர் வந்த பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கணக்காளரிடம் விசாரணை நடத்தினால் சுப்பிரமணியனுக்கு எவ்வளவு கடன் உள்ளது? தற்கொலை செய்வதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார்? என்ற விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சுப்பிரமணியன் பயன்படுத்திய செல்போனில் அழிக்கப்பட்ட விவரங்களை புதிய மென்பொருள் மூலம் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை போலீசாருக்கு கிடைத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும்போது தொழில் அதிபர் சுப்பிரமணியன் கடன் பிரச்சினை காரணமாகத்தான் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


Next Story