முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்று நாளையுடன் ஓராண்டு நிறைவு


முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்று நாளையுடன் ஓராண்டு நிறைவு
x
தினத்தந்தி 21 May 2019 11:05 PM GMT (Updated: 21 May 2019 11:05 PM GMT)

முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்று நாளையுடன் (வியாழக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது. இதில் ‘ஆபரேஷன் தாமரை’யால் அவர் சவால்களை சந்தித்தார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது.

பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரின. ஆனால் பா.ஜனதா கட்சிக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரமாக களம் இறங்கியது. குதிரை பேரங்களும் நடந்தன. இந்த குதிரை பேர ஆடியோ உரையாடல்கள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பெரும்பான்ைமயை நிரூபிக்க முடியாததால், 3 நாட்களில் முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு(2018) மே மாதம் 23-ந் தேதி காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் குமாரசாமி முதல்-மந்திரியாகவும், காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இந்த விழாவில் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு உள்பட பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இது பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் ஒன்று சேர்ந்து செயல்படும் என்ற செய்தியை நாட்டுக்கு மறைமுகமாக தெரியப்படுத்தியது.

குமாரசாமி பதவி ஏற்றதும், பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்தார். ஆனால் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தான் ஏற்கனவே தாக்கல் செய்த பட்ஜெட்டையே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்றும், புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் தொடக்கத்திலேயே கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. தான் அறிவித்த திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று சித்தராமையா விதித்த நிபந்தனையை குமாரசாமி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்தார்.

கூட்டணி ஆட்சி அமைந்தபோதும், ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தின் கீழ் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை பா.ஜனதா கைவிடவில்லை. தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் இன்று வரை பா.ஜனதா ஈடுபட்டு வருகின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் குமாரசாமி நடப்பு ஆண்டுக்கான (2018-19) பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை, அதனால் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டம் நடத்தின.

அந்த கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டனர். இதனால் அரசுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டானது. காங்கிரஸ் சார்பில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. ஒருவரிடம் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா குதிரை பேரம் நடத்தியது தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு பா.ஜனதா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இதனால் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அதன் பிறகு கூட்டணி அரசுக்கு இருந்து ஆபத்து தற்காலிகமாக நீங்கியது.

அதன் பிறகு பா.ஜனதா தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொள்ள முயற்சி செய்து வந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியதை அடுத்து, அவர்கள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கைவிட்டு, தேர்தலில் கவனம் செலுத்தினர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 இடங்களில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் பிரசாரத்தில் பேசி வந்தனர்.

பா.ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க காங்கிரஸ் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணி ஆட்சியை காப்பாற்றினர். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே எழுந்தது.

இதனால் கோபம் அடைந்த, குமாரசாமி, பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி கடும் சவால்களை சந்தித்த குமாரசாமி தனது ஓராண்டு காலத்தை நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவு செய்கிறார். நாளை நாடாளுமன்ற தேர்தல் முடிவும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story