தந்தை 2-வது திருமணம் செய்துகொண்டதால் விரக்தி - தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை


தந்தை 2-வது திருமணம் செய்துகொண்டதால் விரக்தி - தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 23 May 2019 10:45 PM GMT (Updated: 23 May 2019 5:50 PM GMT)

தந்தை 2-வது திருமணம் செய்துகொண்டதால் விரக்தி அடைந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிங்காநல்லூர்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சின்னமனூர் துளசியம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்புராமன். இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 29) என்ஜினீயர். இவர் கோவை பீளமேடு லட்சுமிபுரத்தில் தங்கியிருந்து, சேரன்மாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது தாய் முனியம்மாள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த நிலையில் கோபால கிருஷ்ணனுக்கு திருமணத்துக்கு பெண்பார்த்து வைத்திருந்தனர்.

இதற்கிடையில் தந்தையான சுப்புராமன் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் திருமணத்தை தள்ளிப்போட்டனர். தந்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டதால் தனது திருமணம் தள்ளிப்போனதாக கோபாலகிருஷ்ணன் விரக்தி அடைந்து காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story