ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், தபால் ஓட்டில் முன்னிலை பெற்ற தி.மு.க.


ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், தபால் ஓட்டில் முன்னிலை பெற்ற தி.மு.க.
x
தினத்தந்தி 23 May 2019 10:00 PM GMT (Updated: 24 May 2019 12:11 AM GMT)

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தபால் ஓட்டில் தி.மு.க. முன்னிலை பெற்றது.

ஈரோடு, 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதியில் கடந்த முறை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14 லட்சத்து 62 ஆயிரத்து 70 ஆகும். இதில் மொத்தம் 10 லட்சத்து 62 ஆயிரத்து 3 பேர் வாக்களித்து இருந்தனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 20 பேர் போட்டியிட்டனர்.

அவர்களின் விவரம் வருமாறு: -

அ.கணேசமூர்த்தி ( தி.மு.க.)

ஜி.மணிமாறன்( அ.தி.மு.க.)

கே.எஸ்.செந்தில்குமார் (அ.ம.மு.க.)

எம்.கே.சீதாலட்சுமி( நாம் தமிழர்)

ஏ.சரவணக்குமார்( ம.நீ.ம)

எம்.கோபால்( பகுஜன் சமாஜ் கட்சி)

பி.குப்புசாமி (உழைப்பாளர் மக்கள் கட்சி)

ஆர்.குப்புசாமி ( இந்திய கணசங்கம்)

அ.அருணாசலம் (சுயே.)

சீ.ஆனந்தி (சுயே.)

ஏ.சி.கணேசமூர்த்தி (சுயே.)

மு.கணேசமூர்த்தி (சுயே.)

அ.கதிர்வேல் (சுயே.)

பி.கார்த்திக்கேயன் (சுயே.)

சித்ரா (சுயே.)

கே.சுப்பிரமணியன் (சுயே.)

எஸ்.தர்மலிங்கம் (சுயே.)

ஆ.நடராஜன் (சுயே.)

நா.பரமசிவம் (சுயே.)

ஆ.மணி (சுயே.)

ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடந்தது. பின்னர் மே 19- ந் தேதி ஒரே ஒரு வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேட் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. 3 அடுக்கு பாதுகாப்புடன் மூடி முத்திரையிடப்பட்ட அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட கலெக்டரும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சி.கதிரவன் மற்றும் அதிகாரிகள் தொடர் சோதனையின் மூலம் பாதுகாப்பை உறுதி செய்தனர்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நேற்று, காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முன்னதாக, வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி முழுமையாக பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட கலெக்டரின் அனுமதி மற்றும் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டும் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

காலை 8 மணிக்கு தபால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு அதிகாரிகள் வந்தனர். தேர்தல் மேலிட பார்வையாளர் மாணிக் குர்ரல், கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது. பின்னர் தபால் வாக்குகள் இருந்த பெட்டிகள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தபால் வாக்கு எண்ணிக்கைக்காக நியமிக்கப்பட்டு இருந்த பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியை தொடங்கினார்கள். ஒவ்வொரு உறைகளும் பிரிக்கப்பட்டு வாக்குகள் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளனவா?... அவை செல்லும் வாக்குகளா? செல்லாத வாக்குகளா? என்பதை சரிபார்த்து, உரிய வேட்பாளரின் சின்னத்துடன் கூடிய பெட்டிகளில் போடப்பட்டன. அதன் பின்னரே வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் 8 ஆயிரத்து 852 ஓட்டுகளில் 6 ஆயிரத்து 930 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தபால் ஓட்டில் தி.மு.க.வே முன்னிலை பெற்றது.

இதற்கிடையே காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறைகளில் சீல்கள் அகற்றப்பட்டன. முதலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான அறை திறக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு போடப்பட்டு இருந்த 14 மேஜைகளிலும் வைக்கப்பட்டன. பின்னர் தேர்தல் ஆணையம் அளித்திருந்த நடைமுறைகளின் படி ஆவணங்களை சரிபார்த்து எந்திரங்களில் இருந்த சீல்கள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது.

Next Story