வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்கள் அறைகளில் வைத்து பூட்டப்பட்டன


வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்கள் அறைகளில் வைத்து பூட்டப்பட்டன
x
தினத்தந்தி 24 May 2019 10:45 PM GMT (Updated: 24 May 2019 7:42 PM GMT)

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைகளில் வைத்து பூட்டப்பட்டன.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மையமான சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றதாக இரவு 8.30 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 வாக்கு எண்ணிக்கை அறைகளிலும் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், அவற்றுடன் இணைந்த கட்டுப்பாட்டு கருவிகளும் ‘டிரங்க்’ பெட்டியில் அடைக்கப்பட்டன.

பின்னர் அவற்றில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் தவிர மற்ற எந்திரங்களை வேன்களிலும், லாரிகளிலும் ஏற்றி இரவோடு இரவாக திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம், திருவெறும்பூர் தாலுகா அலுவலகம், திருச்சி மேற்கு தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவற்றை அதற்குரிய அறைகளில் வைத்து பூட்டினார்கள்.

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள மற்ற சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்களும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

Next Story