பாலத்தில் தரமற்ற குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


பாலத்தில் தரமற்ற குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து 2–வது நாளாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 May 2019 4:30 AM IST (Updated: 26 May 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

மூலனூர் அருகே பாலத்தில் தரமற்ற குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மூலனூர்,

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசிணம்பாளையம் ஊராட்சி குறிக்காரன்துறைபுதூரில் பழனி–கொடுமுடி செல்லும் சாலைக்கான விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இந்த சாலை கொடுமுடியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பிரதான சாலையாகும். இந்த சாலை வழியாக பங்குனி உத்திர காவடிகள், தைப்பூச காவடிகளை பக்தர்கள் எடுத்து செல்வார்கள். இந்த பகுதியில் அதிக அளவில் ஜல்லி கிர‌ஷர்கள் அதிக அளவில் இருப்பதால் கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன.

இந்த சாலையில் சின்னம்மன்கோவில் என்ற இடத்தில் பெரிய நீர்வழி பாதை இந்த சாலையை கடந்து செல்கின்றது. தற்போது இந்த இடத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் இந்த நீர்வழி பாதை பாதை கடக்கும் இடத்தில் சிறிய சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

அந்த பகுதியில் சுமார் 300 ஏக்கர் நில பரப்பில் பெய்யும் மழை நீர் இந்த பாலத்தை கடந்துதான் அமராவதி ஆற்றில் கலக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் அமைக்கும் சிமெண்ட் குழாய்கள் வேறு இடத்தில் பதித்து இருந்த பழைய குழாய்கள் மட்டுமல்ல, தரமற்றதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்தி தரமான குழாய்களை அமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் அந்த இடத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

ஆனாலும் நேற்றும் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று குழாய்கள் பதிக்கப்பட்டன. மேலும் அதன் மீது ஜல்லி கற்களும் கொட்டப்பட்டன. இது பற்றிய தகவல் அறிந்த அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு சென்று சாலையில் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து அங்கு வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் பணிகளை கைவிட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது ‘‘ இனிமேலும் பணிகள் நடந்தால் தாராபுரம்–கரூர் சாலையில் மறியலில் ஈடுபடுவோம்’’ என்றனர்.


Next Story