பிரபல நகைக்கடை பெயரில் நகைகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாக மோசடி; பெண் உள்பட 2 பேர் கைது


பிரபல நகைக்கடை பெயரில் நகைகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாக மோசடி; பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 7:43 PM GMT)

தாம்பரத்தில் பிரபல நகைக்கடை பெயரில் பழைய நகைகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாக மோசடி செய்ய முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

டெல்லியை சேர்ந்தவர் வெங்கட்ராகவன் (வயது 42). இவர் சென்னை சின்னமலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி ஜாதகம் பார்ப்பதாக கூறி வந்துள்ளார். இவரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்னை சிட்லபாக்கம் ஜோதிநகரை சேர்ந்த அய்யனார் என்பவரது மனைவி ராஜலட்சுமி (27) என்பவர் வந்து அறிமுகமானார்.

அவரிடம் பிரபல நகைக்கடை ஒன்றில் பழைய தங்க நகைகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாக வெங்கட்ராகவன் கூறியுள்ளார். இதை நம்பி ராஜலட்சுமி ரூ.2 லட்சம் கொடுத்தபோது, அதற்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் நகை வாங்கி தருகிறேன் என்று வெங்கட்ராகவன் கூறியுள்ளார். இதேபோல் பல லட்சம் ரூபாயை ராஜலட்சுமி வசூல் செய்து, வெங்கட்ராகவனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பிரபல நகைக்கடை ஊழியர்கள், தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோரை பிடிக்க முடிவு செய்தனர். இதன்படி நகைக்கடை ஊழியர்கள் வெங்கட்ராகவனை செல்போனில் தொடர்புகொண்டு, தங்களுக்கு நகை வாங்கி தர முடியுமா? என கேட்டனர்.

அப்போது தாம்பரத்தில் உள்ள பிரபல நகைக்கடை பெயரில் ரூ.8 லட்சம் வங்கியில் செலுத்தி, அதற்கான ரசீதை ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்புமாறு வெங்கட்ராகவன் கூறியுள்ளார். அதன்படியே ஊழியர்கள் பணம் செலுத்தி அந்த ரசீதை அனுப்பினர். அதன்பின்னர் நகைக்கடையை தொடர்புகொண்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி உள்ளோம். நகை வாங்க ஒரு பெண் வருவார் என வெங்கட்ராகவன் கூறியுள்ளார். கையும் களவுமாக மோசடி நபரை பிடிப்பதற்காக தாம்பரத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் மேலாளர் தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து அப்போது நகை வாங்க வந்த ராஜலட்சுமியை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் வெங்கட்ராகவனையும் கைது செய்தனர்.

இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story