பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு உதவியாளர்களை அனுப்பி வைப்பதா? அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் கண்டிப்பு


பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு உதவியாளர்களை அனுப்பி வைப்பதா? அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் கண்டிப்பு
x
தினத்தந்தி 28 May 2019 5:06 AM IST (Updated: 28 May 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு இளநிலை உதவியாளர்களை அனுப்பி வைத்த அலுவலர்களை கலெக்டர் அன்புசெல்வன் கண்டித்தார்.

கடலூர்,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார். மொத்தம் 161 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முன்னதாக பண்ருட்டி தாலுகா மாளிகைமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வரும் புவனேஸ்வரியிடம் அவரது கணவர் சிவசங்கருக்கு மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான செலவின மீளத்தொகை ரூ.88 ஆயிரத்து 642-க்கான காசோலையையும், கடலூர் கோண்டூர் திருமலைநகரை தலைமை செவிலியர் குப்புரவியிடம், அவரது கணவர் ரவிக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவின மீளத்தொகை ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 325-க்கான காசோலையையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்களிடம் கலெக்டர் அன்புசெல்வன் பல்வேறு கேள்விகளை கேட்டார். அப்போது ஒவ்வொரு அலுவலரிடம் தன்னுடைய பெயர், எந்த துறை, இதுவரை குறைகேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலை, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் அம்மா கால் சென்டரில் இருந்து பெற்ற மனுக்கள் எத்தனை, அதில் எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தனித்தனியாக கேட்டார். அப்போது பெரும்பாலான அலுவலர்கள் தங்களின் இளநிலை உதவியாளர்களை அனுப்பி வைத்திருந்தனர். அவர்களோ எந்த பதிலும் தெரியாமல் திகைத்துப்போய் நின்றனர். பதிவேட்டையும் கொண்டு வரவில்லை.

இதனால் அவர்களை கலெக்டர் கண்டித்ததோடு வரும் கூட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதில் ஒரு சிலர் 3 மாதங்களுக்கு மேலாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். அவர்களை எச்சரிக்கை செய்த கலெக்டர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தவர்களையும் கண்டித்தார்.

முன்னதாக அண்ணாகிராமம் அருகே திராசு கிராமத்தை சேர்ந்தவர்கள், தங்கள் ஊரில் 90 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனைப்பட்டா வழங்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேரின் மனைப்பட்டா சேதமடைந்து விட்டது. மேலும் சிலரிடம் நகலும் இல்லை. ஆகவே அனைவருக்கும் இலவச மனைப்பட்டா நகல் வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்த பழனியம்மாள் (வயது 55) என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், 2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற மருமகளை தன்னுடைய மகனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story