விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு அனைவரது பங்களிப்பும் தேவை இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு


விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு அனைவரது பங்களிப்பும் தேவை இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு
x
தினத்தந்தி 29 May 2019 11:00 PM GMT (Updated: 29 May 2019 7:20 PM GMT)

திருச்சி என்.ஐ.டி.யில் விண்வெளி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை அதிகப்படுத்துவதற்காக புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்த இஸ்ரோ தலைவர் சிவன், விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு அனைவரது பங்களிப்பும் தேவை என பேசினார்.

திருச்சி,

நாடு முழுவதும் விண்வெளி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை அதிகப்படுத்தும் வகையிலும், மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஆங்காங்கே விண்வெளி தொழில்நுட்ப தொழில் கரு வளர்ச்சி மையம் (இங்குபேசன் சென்டர்) அமைக்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தென் இந்தியாவில் திருச்சியை ஒரு மையமாக இஸ்ரோ தேர்வு செய்தது.

திருச்சியில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் இம்மையத்தை என்.ஐ.டி.யில் அமைக்க முடிவு செய்திருந்தது. இதன் தொடக்க விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி திருச்சி என்.ஐ.டி.யில் நேற்று மதியம் நடந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து அதன் தலைவர் சிவன் காணொலி காட்சி மூலம் இங்குபேசன் சென்டரை அவர் தொடங்கி வைத்தார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:-

திருச்சி என்.ஐ.டி.யில் இங்குபேசன் சென்டர் அமைப்பதற்காக நான் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளேன். போதுமான வசதிகள் இருப்பதால் தென் இந்தியாவில் ஒரு மையமாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோவின் செயல்பாடுகள் நகரப்பகுதி மட்டுமில்லாமல் எல்லா பகுதிகளை நோக்கியும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இது போன்ற மையம் அமைக்கப்படுகிறது. எங்களுக்கு நாடு முழுவதும் இருந்து விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான அறிவார்ந்த திட்டங்கள் தேவைப்படுகிறது. விண்வெளி தொழில்நுட்பம் குறித்து நாடு முழுவதும் உள்ளவர்களின் அறிவை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது போன்ற மையம் தொடங்கப்படுகிறது. விண்வெளி தொழில்நுட்பம் என்பது சிக்கலானது. இதனை சரியாக பயன்படுத்தினால் தான் சாதிக்க முடியும்.

விண்வெளி தொழில்நுட்பம் மற்ற தொழில்நுட்பத்தை விட மாறுபட்டது. தவறுகளுக்கு இடம் இருக்காது. ஒரே ஒரு முறை மட்டும் விண்ணில் ஏவ முடியும். இந்த தொழில்நுட்பத்தில் பல துறை தொழில்நுட்பங்களும் சேர்ந்துள்ளது. நிலத்தில் இருக்கிற பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியதாகவும் விண்வெளி திட்டங்கள் உள்ளன. அதனால் தான் நாங்கள் பல விண்வெளி திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

செயற்கைகோள்கள்

விண்வெளி தொழில்நுட்ப சேவை ஒவ்வொரு சாதாரண மனிதருக்கும் கிடைக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடங்களும் விண்வெளியில் உள்ள செயற்கைகோளுடன் இணைந்துள்ளனர். செயற்கைகோள்கள் செயல்படுவது நின்று விட்டால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான் விண்வெளி தொழில்நுட்பம், ஆராய்ச்சி என்பது முக்கியமானதாக உள்ளது. விண்வெளி தொழில்நுட்ப திட்டத்தில் நாங்கள் 17 ஆயிரம் பேர் மட்டும் வேலை பார்த்தால் போதாது.

நாடு முழுவதும் உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு அனைவரது பங்களிப்பும் தேவை. அதற்காக தான் இங்குபேசன் சென்டர்கள் கொண்டுவரப்படுகிறது. இந்த மையத்தை பயன்படுத்தி புதிய திட்டங்களை கொண்டு வாருங்கள். இஸ்ரோவில் புதிய தொழில்நுட்பம், வளர்ச்சிகளை கொண்டு வருவதே எங்களது இலக்கு.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஐ.டி. இயக்குனர் மினி ஷாஜி தாமஸ், இஸ்ரோ தலைமையகத்தின் திறன் மேம்பாட்டு திட்ட இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டு அதனை பரிமாறிக்கொண்டனர்.

இந்த மையத்தில் ஆராய்ச்சியாளர்கள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பட்டப்படிப்பு மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கலாம். தொழில்முனைவோர்களும் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களை கொடுக்கலாம். மேலும் ஆராய்ச்சி திட்டங்களுக்கும் இந்த மையத்தை பயன்படுத்திகொள்ளலாம். இஸ்ரோவால் அவை சரிபார்க்கப்பட்டு தகுதி அளிக்கப்படும். இதில் தகுதி பெற்றவுடன் இஸ்ரோவின் தற்போதையை திட்டங்களில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாணவர்கள் பட்டம் பெறவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த மையம் குறித்து திறன் மேம்பாட்டு திட்ட இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இஸ்ரோவுக்கு தேவையான பல பொருட்களை மாணவர்கள் கண்டுபிடித்து கொண்டு வரலாம். அதனை தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இஸ்ரோ வருங்கால திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். அகர்தலா, ஜலந்தர் ஆகிய இடங்களில் ஏற்கனவே தொடங்கப்பட்டு என்.ஐ.டி.யின் மையங்களில் 3-வதாக திருச்சியில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் என்.ஐ.டி. ரூர்கேலா, நாக்பூர், இந்தூர் ஆகிய 3 இடங்களில் மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

விழாவில் என்.ஐ.டி. பேராசிரியர் சிவக்குமார், தொழில் நிறுவனத்தினர், பாய்லர் ஆலை, துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள், இந்திய தொழில் கூட்டமைப்பினர் உள்பட மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் உமாபதி வரவேற்று பேசினார். முடிவில் திறன் மேம்பாட்டு திட்ட துணை தலைவர் ஜீவன் குமார் பண்டிட் நன்றி கூறினார். 

Next Story