தண்டையார்பேட்டையில் ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்


தண்டையார்பேட்டையில் ஆட்டோ டிரைவர் கொலையில் 4 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 31 May 2019 12:29 AM GMT (Updated: 31 May 2019 12:29 AM GMT)

தண்டையார்பேட்டையில், ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

முன்விரோதத்தில் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் முந்திக்கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக கைதானவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 28). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் கழுத்தை அறுத்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் சாக்குப்பையில் கட்டி, தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் ஐ.ஓ.சி. டீசல் செட் அருகே உள்ள முட்புதரில் வீசப்பட்டு இருந்தது.

இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, மூர்த்தியின் கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகளை யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.

கொலையான மூர்த்தி மீது ஆர்.கே. நகர் போலீசில் அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்தது. அந்த வழக்கை போலீசார் விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த திருமலை (28) என்பவருக்கும், மூர்த்திக்கும் முன்விரோதம் இருப்பது தெரிந்தது.

சந்தேகத்தின்பேரில் திருமலையிடம் விசாரிக்க அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. அவர் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் வலுத்தது. தலைமறைவான திருமலையை போலீசார் தீவிரமாக தேடினர்.

இந்தநிலையில் மணலி பகுதியில் பதுக்கி இருந்த திருமலையை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். போலீசாரிடம் திருமலை அளித்த வாக்குமூலம் வருமாறு:-

மூர்த்திக்கும், எனக்கும் முன்விரோதம் இருந்தது. மூர்த்தி, என்னை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி னார். எனவே நான் முந்திக்கொண்டு எனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி (25), துப்பாக்கி மோகன்(31), சரவணன்(31) ஆகியோருடன் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி நாங்கள் 4 பேரும் சேர்ந்து மணலி விரைவு சாலை அருகே சடையான் குப்பத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான காலி மைதானத்தில் மது அருந்த வரும்படி மூர்த்தியை வரவழைத்தோம். அங்கு 5 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மூர்த்தியின் கழுத்தை அறுத்தும், தலையில் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தோம். அவரது உடலை சாக்குப்பையில் வைத்து கட்டி, மூர்த்தியின் ஆட்டோவிலேயே கொண்டு வந்து எண்ணூர் நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புதரில் வீசினோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து திருமலை அளித்த தகவலின்பேரில் அவரது நண்பர்களான பசுபதி, மோகன், சரவணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story