பெண்ணை தாக்கி தாலி சங்கிலி பறித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


பெண்ணை தாக்கி தாலி சங்கிலி பறித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் பெண்ணை தாக்கி தாலி சங்கிலியை பறித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டம், குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் கணேசன். மீன் வியாபாரி. இவருடைய மனைவி ரேவதி (வயது 39). கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி கணேசன் வெளியூர் சென்றதால், வீட்டில் ரேவதி தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்டு அங்கு வந்த குளித்தலை கலப்பு காலனியை சேர்ந்த மலபார் என்கிற ஷாஜகான் (29) திடீரென ரேவதியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிப்பதற்காக பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி தாலி சங்கலியை கையால் இறுக பிடித்து கொண்டு போராடினார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷாஜகான் அங்கிருந்த கல்லை எடுத்து அவரை தாக்கியதோடு, உடலில் கடித்து விட்டார்.

அப்போது தாலி சங்கிலி அறுந்ததில், தனது கையில் சிக்கிய 3 பவுனுடன் அங்கிருந்து ஷாஜகான் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ரேவதி புகார் கொடுத்தார். அதன் பேரில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நகை வழிப்பறி செய்ததாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 449 மற்றும் 394-ன்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகானை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி ஷாஜகானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வேனில் அழைத்து சென்று ஷாஜகானை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு ஆதாரங்களை சேகரித்து பணிகளை மேற்கொண்ட குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பாராட்டினார். 

Next Story