21 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்


21 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 4 Jun 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

21 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் கொடுத்த மனுவில், என்னுடைய குடும்ப செலவிற்காக எனது கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1½ லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினேன். வாங்கிய தொகைக்கு அந்த பெண்ணிடம் மாதம், மாதம் வட்டி தொகையை செலுத்தி விட்டு, அசல் தொகை ரூ.1 லட்சம் கொடுத்து விட்டேன். மீதம் ரூ.50 ஆயிரம் அசல் தொகை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த பெண் ரூ.4½ லட்சம் அசல் தொகை தர வேண்டும் என்று கூறி, அடியாட்களை அனுப்பி வைத்து, மிரட்டியும், கந்து வட்டியாக அந்த பணத்தை வசூலிக்க பார்கிறார். மேலும் அவர் எனது குடும்பத்தினரை செல்போனில் படம் எடுத்து கொண்டு, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனவே அந்த பெண், அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னையும், எனது குடும்பத்தினரையும் கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 245 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்று கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அந்த மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து கலெக்டர் சாந்தா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் தசை சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 21 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.74,500 வீதம் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் (பேட்டரியால் இயங்கும்) வண்டிகளை வழங்கினார். மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேப்பூர் கிளை வாடிக்கையாளர் முத்துலிங்கம் என்பவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் கடந்த ஆண்டு மரணமடைந்ததை தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கில் விபத்து காப்பீடு திட்டமான ஐ.ஓ.பி. சுரக்‌ஷா என்ற திட்டத்தின் கீழ், அவரது வாரிசுதாரராகிய அவரது மனைவி நட்டார் என்பவருக்கு காப்பீட்டு இழப்பு தொகை ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, தனி உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி காமாட்சி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், ஐ.ஓ.பி. வேப்பூர் கிளை மேலாளர் குருராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story