ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும் நடிகர் விவேக் பேச்சு


ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும் நடிகர் விவேக் பேச்சு
x
தினத்தந்தி 5 Jun 2019 11:00 PM GMT (Updated: 5 Jun 2019 5:46 PM GMT)

ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறினார்.

திருவண்ணாமலை,

தூய்மை அருணை திட்டத்தின் சார்பில் திருவண்ணாமலை நகரில் மரக்கன்றுகள் நடுவது என தீர்மானிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை அருணை திட்டம் சார்பில் திருவண்ணாமலை வ.உ.சி.நகரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடந்தது.

விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்துகொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலையில் பச்சை கொடியை போர்த்த வேண்டுமென்றால், இந்த மஞ்சள் படையாக உள்ள தூய்மை அருணை தேவை. நான் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மரங்களை நடுவேன். ஆனால் இந்த ஆண்டு நானே நம்முடைய தூய்மை அருணை அமைப்பாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு இந்த வருடம் உங்களுடைய, தூய்மை அருணையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுகிறேன் என்று கோரிக்கை வைத்தேன். உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்து, இங்கு உங்களை எல்லாம் சந்திக்கிற ஒரு விழாவை ஏற்பாடு செய்துள்ளார்.

பொதுவாக இந்த நகரத்தை பற்றி நான் சொல்லியாக வேண்டும். இந்த ஊர் தமிழ்நாடு முழுவதும் மட்டும் அல்லாமல், இந்திய அளவில் மட்டும் அல்லாமல், உலக அளவில் ஆன்மிகத்திற்கு முதலிடம் பிடித்த ஊர் ஆகும். காரணம் அந்த காலங்களிலேயே அருணகிரி நாதர், ரமணர், ராம்சூரத்குமார் மற்றும் இந்த காலத்தில் வாழ்ந்த மூக்குப்பொடி சித்தர் வரை வாழ்ந்து மறைந்த நகரம்.

பொதுவாக திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியிலே இறந்தால் முக்தி என்பார்கள். ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட திருவண்ணாமலையில் கடந்த வாரம் இடிவிழுந்து மலையின் மேல்பகுதியில் தீப்பற்றி எரிந்த போது, சிவனே மழையின் மூலமாக அந்த தீயினை அழித்தான் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

மன்னர்கள் காலத்திலேயே கூட மேற்கு தொடர்ச்சி மலையிலே இருந்து 126 ஆறுகளை பராமரித்து வைத்திருந்தார்கள். நம்முடையை தமிழ்நாட்டில் உள்ள தாமிரபரணி ஆறு, வைகையாறு, காவிரி ஆற்றைக்கூட நாம் சரியாக பராமரிப்பது கிடையாது.

தமிழகத்தில் மட்டும் நாம் மேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிப்பது கிடையாது. எனவே தான் மழைகாலங்களில் கூட இங்கு மழை வருவது கிடையாது. அதற்காக தான் தூய்மை அருணை திட்டத்தின் மூலம் மரம் நடும் பணியை செய்துவருகிறோம்.

நாம் நடும் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு ஆக்சிஜன் சிலிண்டரை போல, நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நமக்கு ஆக்சிஜன் தேவை. எனவே தான் ஒவ்வொரு மரத்தையும் தாய்க்கு நிகராக நினைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன் மற்றும் ப.கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story