சிவகாசியில் சாலையை சீரமைக்க கோரி முற்றுகை போராட்டம்


சிவகாசியில் சாலையை சீரமைக்க கோரி முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:00 AM IST (Updated: 7 Jun 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் சாலையை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

சிவகாசி, 

சிவகாசி சேர்மன் சண்முகம்நாடார் ரோடு, நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கும் 3 தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், நகராட்சி குடிநீர் தேக்க தொட்டி ஆகியவை இந்த சாலையில் அமைந்துள்ளன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி முடிந்து தற்போது வாருகால் அமைக்கும் பணி தொடங்குகிறது. இதற்கிடையில் இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை உரிய உத்தரவிட்டு பல மாதங்கள் ஆன பின்னரும் அந்த சாலையை சீரமைக்க வில்லை.

இந்த பகுதியில் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் அந்த சாலையில் உள்ள வாருகால் சேதம் அடைந்து கழிவுநீர் வெள்ளம் போல் சாலையில் ஓடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. இந்த பணிகளை பள்ளி விடுமுறை நாட்களில் செய்தால் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு இருக்காது என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த பணிகள் ஏதும் தற்போது முடியவில்லை.

இந்த நிலையில் அந்த சாலை கடந்த 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு இருந்த போதிலும் சேர்மன் சண்முகம்நாடார் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளை திறக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டதால் அந்த பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டது. நேற்று முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், வாருகால் அமைக்கும் பணிகளையும் வேகப்படுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணிகளை தரமாக நடத்தவேண்டும் என்று பல்வேறு அமைப்புகளின் சார்பில் நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சசிநகர்முருகன், தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் நகராட்சி என்ஜினீயர் ராமலிங்கத்திடம் கோரிக்கை குறித்து மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி பணிகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது இந்த ரோட்டில் தற்போது நடைபெற்று வரும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு இருந்தால் தற்போது பணி முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து இருக்கும். ஆனால் தற்போது தான் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த பணிகள் முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த பணியை தரமாக செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story