குற்றாலத்தில் சீசன் தொடங்குவது தாமதம் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம்


குற்றாலத்தில் சீசன் தொடங்குவது தாமதம் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:45 AM IST (Updated: 9 Jun 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

மழை இல்லாததால் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தென்காசி, 

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குற்றாலம் திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். இந்த காலத்தில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மே மாதம் இறுதியிலேயே குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் இன்று வரை குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்யவில்லை.

கடந்த ஆண்டு இந்த நாட்களில் சீசன் தொடங்கி குற்றாலம் களைகட்டி இருந்தது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து சென்ற குற்றாலத்தில், தற்போது பருவமழை இல்லாததால் குற்றாலம் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. அருவிகளில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் குற்றாலம் சீசனை நம்பியே கடை வைத்து உள்ள வணிகர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓரிரு கடைகள் தவிர மீதம் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிக்கரைகளில் உள்ள வணிகர்கள் குற்றால சீசனை நம்பியே கடைகளை நடத்தி வருகின்றனர். தற்போது மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால் மிகப்பெரிய அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் குற்றாலத்தில் சீசன் தொடங்காததால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே குற்றாலத்தில் சீசன் களைகட்டும் என்று தெரிகிறது. பருவமழையை எதிர்பார்த்து சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் உள்ளனர்.

Next Story