தொழில்நுட்ப கோளாறு: மதுரை–சிங்கப்பூர் விமானம் 16 மணி நேரம் தாமதம்


தொழில்நுட்ப கோளாறு: மதுரை–சிங்கப்பூர் விமானம் 16 மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:00 PM GMT (Updated: 8 Jun 2019 10:44 PM GMT)

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை–சிங்கப்பூர் விமானம் 16 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமானம் செல்கிறது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் இரவு 11.30 மணிக்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மதியம் 12.15 மணிக்கும் சிங்கப்பூருக்கு விமானம் செல்கிறது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூர் செல்வதற்கு தயாராக இருந்தது. அதில், 163 பயணிகள் பயணம் செய்ய தயாராக இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து அதில் உள்ள பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அதன்பின்னர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய விமான நிலைய ஊழியர்கள் வந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

இதற்கிடையே, விமான நிலையத்தில் தங்கி இருந்த பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு கொடுக்கப்பட்டது. ஒரு சில பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர். அந்த விமானம் சுமார் 16 மணி நேர தாமதத்திற்கு பின்னர் நேற்று மதியம் 3.30 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.


Next Story