நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன - கோவையில் லதா ரஜினிகாந்த் வேதனை


நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன - கோவையில் லதா ரஜினிகாந்த் வேதனை
x
தினத்தந்தி 10 Jun 2019 11:30 PM GMT (Updated: 10 Jun 2019 8:51 PM GMT)

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கோவையில் லதா ரஜினிகாந்த் வேதனையுடன் தெரிவித்தாா்.

கோவை,

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் தயா பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் சமூக சேவைகள் செய்து வருகிறார். அத்துடன் பீஸ் பார் சில்ரன் என்ற பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கோவையில் குழந்தைகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. அதில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு குழந்தைகளுடன் உரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குழந்தைகளை பாதுகாப்பதற்காகவே பீஸ் பார் சில்ட்ரன் என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் இந்த அமைப்பை தொடங்க உள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம். நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறன்றன.

குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை. குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வர வேண்டும். இந்த காலத்தில் கூட்டுக்குடும்பம் இன்றி தனியாக வசிப்பதால் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குழந்தைகளை பாதுகாக்க முடியும்.

எல்லா விதமான இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றன. வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது, சமூகத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும்.

குழந்தைகள் பிரச்சினைக்குள்ளாகி இருப்பதை பார்பவர்கள் உடனடியாக தகவல் அளித்தால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story