அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததாக பெண் டாக்டர் மீது கலெக்டரிடம் புகார்
அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததாக பெண் டாக்டர் மீது கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் நடைபாதை வசதி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கோவை பாப்பநாயக்கன்பாளையம் அசோகர் வீதியை சேர்ந்த கணேசன், அவருடைய மனைவி புவனேஸ்வரி ஆகியோர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதில், கூறப்பட்டு உள்ள தாவது:-
எனது மனைவி புவனேஸ்வரிக்கு கர்ப்பப் பை மற்றும் ஹெர்னியா பிரச்சினை இருந்தது. இதற்காக புலியகுளத்தில் உள்ள பெண் டாக்டரிடம் மருத்துவ பரிசோதனை செய்தோம். அவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதன்படி, கடந்த 16.11.2018 அன்று நவ இந்தியா அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் எனது மனைவிக்கு, அந்த பெண் டாக்டர் அறுவை சிகிச்சை செய்தார். அதன் பிறகு எனது மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. கடந்த 23.3.2019 அன்று ரத்தபோக்கு ஏற்பட்டதால் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தேன். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றின் அடிப்பகுதியில் பஞ்சு உள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ளதால் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்படி கூறினர். இதையடுத்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்த போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, எனது மனைவியின் வயிற்றில் இருந்த பஞ்சை அகற்றினர்.
இது குறித்து அந்த பெண் டாக்டரிடம் கேட்ட போது அவரும், அவருடைய கணவரும் எங்களை திட்டி, காவலாளியை வைத்து வெளியேற்றி விட்டனர். எனவே தவறான சிகிச்சை அளித்த பெண் டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நஷ்டஈடும் பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சட்ட உரிமை பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், லோட்டஸ் மணிகண்டன், கணேசன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அளித்த மனுவில், கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரேப்பிடோ என்ற செல்போன் செயலி மூலம் சொந்த உபயோகத்திற்கு வாங்கிய இருசக்கர வாகனங்களை வாடகைக்கு சிலர் இயக்கி வருகின்றனர். இதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே கோவையில் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் கதிரி மில்ஸ் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் அளித்த மனுவில், நாங்கள் கடந்த 2017-18 ம் ஆண்டு பிளஸ்-2 படித்து வெளியேறினோம்.
ஆனால் இதுவரை எங்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட வில்லை. நாங்கள் தற்போது கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறோம். எங்களது மேற்கல்விக்கு தேவைப்படுவதால் விரைந்து மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கோவை மாநகராட்சி 66-வது வார்டு உடையாம்பாளையம் அசோக்வீதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கதிர்வீச்சால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story