மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 7:39 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தென்மேற்கு பருவமழை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறியப்பட வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்பதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளான வாகன போக்குவரத்து, படகு போக்குவரத்து போன்றவைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கிட அரசு பொதுக்கட்டிடங்கள் கழிவறை வசதியுடன் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தயார் நிலையில் இருக்க வேண்டும்

மேலும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆற்றுப்பாலம் கட்டிடங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்றவைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உடைப்புகள் ஏற்படும்போது முன்கூட்டியே தடுத்திடும் நோக்கில் மணல் மூட்டைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மழை காலங்களில் மின்சாரம் தடையில்லாமல் கிடைத்திடவும், மின்மாற்றிகள் பழுதுகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்றிட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அலுவலர்கள் எடுத்திட வேண்டும் மேலும் இக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுத்திட போதிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறையின் சார்பில் மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள், வி‌‌ஷவாயு தாக்கும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் தீயணைப்புத்துறை அலுவலர்கள் செய்து காட்டியதை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார்.

Next Story