பாகூர் அருகே 3–வது முறையாக தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
பாகூர் அருகே 3–வது முறையாக தனியார் பஸ்சின் கண்ணாடியை கல்வீசி உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாகூர்,
புதுச்சேரியில் இருந்து பாகூர் வழியாக கரையாம்புத்தூருக்கு நேற்று இரவு 8.30 மணியளவில் தனியார் பஸ் சென்றது. பாகூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பகுதியில் சென்றபோது அப்பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் திடீரென்று பஸ் மீது கற்களை சரமாரியாக வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதைக்கண்டு திடுக்கிட்ட டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி அந்த பகுதியில் மர்மநபர்களை தேடிப்பார்த்தனர். ஆனால் இருள் சூழ்ந்திருந்ததால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்வீச்சு சம்பவத்தில் கண்ணாடி உடைந்ததில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே தனியார் பஸ்சை, இதே இடத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கி, கண்ணாடியை உடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுவனூர் அருகே இந்த பஸ் மீது கல்வீசப்பட்டது. தற்போது 3–வது முறையாக இதே பஸ்சை குறிவைத்து மர்மநபர்கள் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
3–வது முறையாக பஸ் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதன் டிரைவர் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அந்த வழியாக சென்ற பஸ்கள் மற்றும் பிற வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுவழியில் நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்த பாகூர் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பஸ் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்ல அதன் டிரைவர் அனுமதித்தார். அதன்பின்னர் கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதன்பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.
பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்த தனியார் பஸ் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.