ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: புரோக்கர்கள் 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி நாமக்கல் கோர்ட்டு உத்தரவு


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: புரோக்கர்கள் 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 6:42 PM GMT)

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் புரோக்கர்கள் 2 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நாமக்கல் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவருடைய கணவர் ரவிச்சந்திரன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, செல்வி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் செவிலியர் உதவியாளர் சாந்தி சார்பில் 3-வது முறையாகவும், புரோக்கர் லீலா சார்பில் 5-வது முறையாகவும், செல்வி சார்பில் 2-வது முறையாகவும் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தனசேகரன், ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புரோக்கர்கள் லீலா, செல்வி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செவிலியர் உதவியாளர் சாந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Next Story