மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு


மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 PM GMT (Updated: 12 Jun 2019 8:02 PM GMT)

மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேட்டூர்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந்தேதிக்கு முன்னதாகவோ, அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில் குறித்த தேதியான ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு 15 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் ஜூன் 12-ந்தேதிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதனால் தென்மேற்கு பருவமழை காலங்களில் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பெய்யும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.

இதனால் தமிழகத்தில் பருவமழை பொய்த்த காலங்களில்கூட கர்நாடக மாநிலத்தில் பெய்யும் மழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

கடந்த 2011-ம் ஆண்டில் குறித்த தேதியான ஜூன் 12-ந்தேதி அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாமல் காலதாமதமாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய தேதியான நேற்று தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 45.53 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 722 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு குறுவை சாகுபடிக்கு போதுமானதாக இல்லை. ஆகவே தொடர்ந்து இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்ட பாசன விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

Next Story