மாவட்ட செய்திகள்

நீர் வளங்களை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர்கள் மாநாட்டில் குமாரசாமி பேச்சு + "||" + To create awareness among the people to protect water resources - Kumaraswamy's speech at the Collector's Conference

நீர் வளங்களை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர்கள் மாநாட்டில் குமாரசாமி பேச்சு

நீர் வளங்களை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர்கள் மாநாட்டில் குமாரசாமி பேச்சு
நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், நீர் வளங்களை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட பல்வேறு மந்திரிகள் மற்றும் கலெக்டர்கள், மண்டல கமிஷனர்கள் கலந்து கொண்டனர். இதில் குமாரசாமி பேசியதாவது:-


கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் தண்ணீரையும், நீர் வளங்களையும் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் தனியார் ஆழ்குழாய் கிணறுகளை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்.

அரசின் திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேறு வழி இல்லாவிட்டால் மட்டுமே ஆழ்குழாய் கிணறு தோண்ட வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் டேங்கர் லாரிகளுக்கு 15 நாட்களுக்குள் கட்டணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும்.

மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.949 கோடியை ஒதுக்கியது. இதில் இதுவரை விவசாயகளுக்கு பயிர் இழப்பீடாக ரூ.651 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அளவில் வருவாய்த்துறை குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று வயதானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உத்தர கன்னடா மாவட்டத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரிகளை தூர்வார நடப்பு ஆண்டு, நீர் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் குப்பைகளை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். தூய்மையே வெல்லும் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மையை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும்.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் ஏரிகளை தூர்வார வேண்டும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகளை நட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இதில் வருவாய் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சி மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி, தோட்டக்கலைத்துறை மந்திரி மனகுலி, சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே, தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், வீட்டு வசதித்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ், சுகாதாரத்துறை மந்திரி சிவானந்தபட்டீல், கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.