தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடிய கைதி பெங்களூருவில் கைது


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடிய கைதி பெங்களூருவில் கைது
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 6:41 PM GMT)

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தப்பியோடிய கைதியை பெங்களூருவில் தர்மபுரி போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 36). சாப்ட்வேர் என்ஜினீயர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தர்மபுரியில் இருந்து இண்டூருக்கு செல்ல காத்திருந்த இவரை 3 வாலிபர்கள் லிப்ட் கொடுப்பதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று நகையை பறித்தனர். பின்னர் ஏ.டி.எம். மையத்திற்கு அவரை அழைத்து சென்று அவருடைய ஏ.டி.எம். கார்டு மூலமாக பணப்பறிப்பில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட தர்மபுரியை சேர்ந்த வினோத்(22), கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சிலம்பரசன்(21) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். வினோத்திற்கு காலில் காயம் இருந்ததால் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் அதிகாலையில் தப்பியோடி விட்டார்.

இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வினோத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி வினோத் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தர்மபுரி தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு சென்று பதுக்கி இருந்த வினோத்தை நேற்று கைது செய்தனர். அவரை தர்மபுரிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story